அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 25-36 (நவம்பர் 2016)
____________________________________________________________
புற்றுநோய் முன்கணித்தல் மற்றும் கண்டறியும் முறைகள்:
உயிர்குறிப்பான் (பயோமார்க்கர்) மூலம் ஆரம்ப நிலை
புற்றுநோய் கண்டறிதல்
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 25-36, நவம்பர் 2016
சதாசிவம் சுப்ரமணியம், சவிதா சிவசுப்ரமணியன்
திட்டசுருக்கம்
உடலின் உயிர் அணுக்களின் கட்டுப்பாடற்ற பெருக்கம் மேலும் அதனை சுற்றியுள்ள திசுக்களுக்கும் இவை
பரவுவது புற்று நோய் என குறிப்பிடப்படுகிறது. சாதாரண வளர்ச்சிதை மாற்றங்களின் போது, உயிரணுக்கள்
முதுமை அல்லது சேதம் ஆகியவற்றிற்கு ஆளாகும். பின் அவையே ஒன்றன் பின் ஒன்றாக முறையான
வகையில் சீரமைக்கப்பட்டு மறு உருவாக்கம் பெறும். இந்நிலையில் இறந்த உயிரணுக்கள் அகற்றப்பட்டு
புதிய செல்கள் உருவாக்கப்படுகிறது. இப்படியிருக்க புற்றுநோய் வளர்ச்சியின்போது, சாதாரண உயிரணுக்கள்
சைகையிணை புறக்கணித்து அசாதாரண செல் பெருக்கம் ஏற்பட்டு உடலெங்கும் பரவுகிறது. இவ்வாறாக
கூடுதலாக உருவாகிய பிண்டம், தீங்கற்ற அல்லது வீரியம் மிகுதி கொண்ட புற்று கட்டி என
குறிப்பிடப்படுகிறது. மருத்துவரீதியாக, 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு புற்றுநோய்கள் உள்ளன. இவை,
அதன் பிறப்பிட அடிப்படையில் பெயரிடப்படுகின்றன. புற்றுநோயானது உடலின் ஒரு பகுதியிலிருந்து
பிறபகுதிகளுக்கு பரவுவது என்பது மெட்டாஸ்டாடிஸ் என்று விவரிக்கப்படுகிறது. பொதுவாக புற்றுநோயை
பரிசோதனை செய்வதற்க்கு, பின்வரும் கருவிகள்/முறைகள் உபயோகப்படுத்தபடுகிறது: இவை முறையே,
பாசிடிரோன் எமிஷன் டோமோகிராப்பி, மேமோகிராஃபி, சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஆகும். தற்போதைய
நோய் கண்டறியும் உத்திகள் மூலம், புற்றுநோய் கட்டிகள் நன்கு முதிர்வுற்ற நிலையில் மட்டுமே
கண்டறியப்படமுடிகிறது. இவ்வாறு காலம் கடந்து கண்டறியப்படும் கட்டிகள் குணப்படுத்தக்கூடிய கால
வரம்பினை முற்றிலும் கடந்து விட்ட நிலையை அடைகிறது. மேலும் இந்த உத்திகள், நீர்ப்பாயம் (சீரம்)
கட்டி உயிர்குறிப்பான்களான கரு புற்றுநோய் அயல்பொருள் (ஆண்டிஜென்), புற்றுநோய் அயல்பொருள் 19-9
(சிஎ 19-9) மற்றும் பிறப்புறுப்பு குறிக்கப்பட்ட அயல்பொருள் போன்றவற்றுக்கு உபயோகப்படாது.
அமெரிக்காவில் மட்டும், கடந்த 2015-ல், ஏறத்தாழ 589,430 புற்றுநோய் இறப்புக்கள் மற்றும் 1,658,370 புதிய
புற்றுநோயாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே தற்போதைய புற்றுநோய் ஆராய்ச்சிகள்,
புற்றுநோய்களை தொடக்க நிலையில் அறிவதற்காக விரைவான, எளிய மற்றும் குறைந்த செலவை
கொண்ட புதிய நோய் கண்டறியும் முறைகளை உருவாக்க முயற்ச்சிக்கின்றன. புற்றுநோய்கள் தொடக்க
நிலையிலேயே கண்டறியப்பட்டால், சுமார் 3 - 35% மரணங்களை தடுப்பதோடு மட்டுமில்லாமல் ஒட்டு
மொத்த சிகிச்சைக்கான செலவினத்தையும் குறைக்கமுடியும். இதனை கருத்தில் கொண்டு, இந்த விமர்சன
கட்டுரையில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பரவலாக காணப்படும் முக்கிய புற்றுநோய்கள் பற்றி
விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய மற்றும் புதிய புற்றுநோய் கண்டறியும் உத்திகள் பற்றியும்
அதன் அனுகூலங்கள் மற்றும் பிரதிபலன்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
____________________________________________________________